பஜாஜ் எஎஸ் 150 விமர்சனம்

இந்தியாவின் 150 சிசி செக்மன்ட் ஏற்கனவே ஏகப்பட்ட மாடல்களை கொண்டிருக்கும் நிலையையில் அனைத்து நிறுவனங்களும் மேலும் புதிய மாடல்களை களமிறக்கி வருகின்றன. அந்த வகையில் வெளியான எஎஸ்150 சிறப்பான வரவேற்பபை பெற்றுள்ளது.

இந்திய பைக் ரைடர்களின் மனதில் பஜாஜ் நிறுவனம் நீங்கா இடம் பெற்றுள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. மிகச்சிறப்பான தோற்றம், நீண்ட பட்டியல் கொண்ட வசதிகள், கைக்கு அடக்கமான விலை போன்றவை மூலம் மீண்டும் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது பஜாஜ். மிகப்பெரிய போட்டியாளர்களை கொண்ட இந்த செக்மன்ட்டில் பஜாஜ் எஎஸ் 150 நிறைகுறைகளை பார்க்கலாம் வாருங்கள்.

தோற்றம் மற்றும் வசதிகள்:

as-150-center-console

பஜாஜ் வாகனங்களுக்கே உரிய மிடுக்கான தோற்றம் பார்த்தவுடன் மனத்தில் பதிகிறது. புதிய  அலாய் வீல்கள் மற்றும் உயர்ந்த தனித்த இருக்கைகள் இதன் ஸ்போர்ட்டியான தோற்றத்திற்கு மேலும் வலுசேர்க்கின்றன. அடிப்படையில் இந்த மாடல் பல்ஸர் 200என்எஸ் மாடலின் பாடி அமைப்பை கொண்டிருந்தாலும், புதிய கட்டிங்எட்ஜ் தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்பாக மேம்படுத்தபட்டுள்ளது.

200என்எஸ் மாடலின் போன்ற அதே முகப்பு விளக்குகள் பெரிய வின்ட் ஸ்க்ரீனுக்கு கீழாக இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் இருந்து பெட்ரோல் டாங்க் வரையில் ஒவ்வொரு இடத்திலும் செதுக்கியது போன்ற வரிகள் நேர்த்தியாக கொடுக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் டாங்க்கும் ஸ்ட்ரீட்பைக் போன்றே இருந்தாலும் முன்புறம் ரப்பர் பட்டை புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது.

bajaj-pulsar-as150-review-india-road-yenthiran

மேலும் இதர அம்சங்களாக அண்டர் பெல்லி எக்ஸ்சாஸ்டர், ஸ்ப்லிட் இருக்கைகள், நட்சத்திர வடிவம் கொண்ட ஆலோய் வீல்கள் மற்றும் பின்புற எல்இடி டேன்ஜர் விளக்குகள் ஆகியவை கூடுதல் கவனத்தை பெருகின்றன. பாடி கிராபிக்ஸ் குறைவாக இருந்தாலும் அழுத்தமான சிவப்பு வண்ணம் நிச்சயம் திரும்பி பார்க்க வைக்கும். கைப்பிடிகள் பிடிப்பான உணர்வை தருகின்றன. ஆனால் இன்டிகேட்டர் சுவிட்ச் ஆன், ஆப் செய்வதற்கு சற்று கடினமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃபிட் அண்ட் ஃபினிஸ் மிகச்சிறப்பாக உள்ளது. கரடுமுரடான சாலைகளில் கூட எந்த அதிர்வும் இல்லாமல் திடமான சாலைபிடிப்பை கொடுக்கிறது. எனவே ஒட்டுமொத்த கட்டுமானத்தரம் திருப்தியளிக்கிறது. சென்டர் கண்சோல் பாதி ஆனலாக் மற்றும் பாதி டிஜிடல் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆனலாக் டேக்கோமீட்டர் கண்சோலின் நடுப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. கண்சோல் திரை வண்டி ஒட்டும் போதும் எளிதாக சிரமமின்றி பார்க்க முடிவது மற்றொரு சிறப்பம்சம். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது புதிய டிசைன் தாத்பரியதிற்கு இந்த இன்ஸ்ட்ருமென்டல் கிளஸ்டர் சிறப்பான தோற்றத்தை கொடுக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

என்ஜின் மற்றும் செயல்திறன்:

bajaj-pulsar-as150-review-india-road-test-yenthiran

ஏஎஸ் 150 யில் பயன்படுத்தபட்டிருக்கும் புத்தம் புதிய என்ஜின் 150சிசி திறன்கொண்டது. மேலும் இந்த எஞ்ஜினை தயாரிக்க பஜாஜ் நிறுவனம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களை எடுத்துகொண்டது கவனிக்கத்தக்கது. நான்கு வால்வுகள் கொண்ட ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்ட் டிடிஎஸ்ஐ என்ஜின், 175பிஎஸ் பவரை 9500ஆர்பிஎம் மிலும், 13என்எம் டார்க்கை 7000 ஆர்பிஎம் மிலும் அளிக்கவல்லது. இப்புதிய என்ஜினின் சீரான பவர் டெலிவரியால் நகரச் சாலைகளில் எந்தவித சிரமுமின்றி சீறுகின்றது. 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் பழைய எஞ்ஜினை விட பல மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ள போதிலும் மிருதுவான உணர்வை தரவில்லை.

கிளட்சை சரியாக கையாளும் போது கியர் ரேஸியோ(ratio) சிறப்பாக விநியோகிக்கபடுவது ஒட்டுதல் தரத்தை அதிகரிக்கின்றது. இருந்தபோதிலும் ஹேண்டில்பார், ஃபுட் ரெஸ்ட் மற்றும் பெட்ரோல் டேங்க் என அநேக இடங்களில் அதிர்வுகளை உணர முடிகின்றது. சோதனையின் போது நம்மால் முழுவேகத்தை எட்ட முடியவில்லை. அதே நேரம், புதிய சத்திவாய்ந்த என்ஜின் மற்றும் பெரிய முன்புற வின்ட்ஸ்க்ரீன் போன்றவை வசதிகள் 90கிமீ வேகத்தை தாண்டும்போதும் நிலையான ஒட்டுதல் தரத்தை அளிக்கும் என்பது நமது எதிர்பார்ப்பு.

கையாளுமை மற்றும் பிரேக் அமைப்பு:

bajaj-pulsar-as150-telescopic-fork

புதிய எஎஸ் 150 யின் தனித்தன்மையாக இதை கூறலாம்.  இந்த புதிய பல்ஸர் வளைவுகளில் அநாயாசமாக திரும்புகிறது.  ஃபுட் ரெஸ்ட் உரசி விடும் என்ற பயமோ அல்லது டயர் வழுக்கும் உணர்வோ இல்லை. புதிய பெரிமீட்டர் ஃப்ரேம் தனது வேலையை செவ்வனே செய்கிறது. எடையும் பல்ஸர் 150 யை விட சில கிலோகிராம்கள் குறைவாக உள்ளது செயல்திறனை அதிகரிக்கின்றது.

முன்புறம் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும் பின்புறம் மோனோஷாக் சஸ்பென்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கடினமான சாலைகளை எளிதாக சமாளிக்கின்றது. பிரேக்குகளை பொருத்தவரை முன்புறம் 240மிமீ டிஸ்க் மற்றும் பின்புறம் 130மிமீ ட்ரம் பிரேக்குகள் குறைந்த வேகத்தில் சிறப்பாக செயல்படுகின்றன. மிருதுவாக உள்ளதால் அதிக வேகத்தில்  சற்று வேகமாக அழுத்த தோன்றுகிறது.

ஒட்டுதல் தரம் மற்றும் இருக்கை வசதிகள்:

bajaj-pulsar-as150-review-india-road-test-images-side

கிளிப் ஆன் ஹேன்டில்பார்கள் மற்றும் நடுப்பகுதிக்கும் சற்றே பின்புறம் அமைக்கப்பட்டுள்ள ஃபுட் ரெஸ்டுகள் ஸ்போர்டீயான டிரைவீங் பொசிஷனை கொடுக்கின்றன. எனவே தினசரி பயன்பாட்டுக்கும் அதே சமயம் நிச்சயமாக நீண்ட தூர பயணங்களையும் எளிதாக சமாளிக்க முடியும். மேலும் இருக்கை சராசரி உயரத்தை விட சற்றே கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. சற்று உயரம் குறைவானவர்களுக்கு கொஞ்சம் சிரமமாகவே இருக்கும். அதேபோல் பில்லியன் இருக்கைகள் ஸ்ப்லிட் ஸீட் அமைப்பில் உள்ளதால் உயரம் இன்னும் அதிகமாகிறது. தாராளமான இடவசதியுடன் கிராப் ரெயில்ஸ்சும் கொடுக்கப்பட்டிருப்பது இந்த மாடலை பில்லியன் ஃப்ரன்ட்லி மாடலாக முன்னிறுத்தும்.

as-150-tail-review-yenthiran

விலை மற்றும் எரிபொருள்:

எப்போதும் போலவே இந்த மாடலும் குறைவான விலையிலேயே 79,000 ரூபாய்(எக்ஸ் ஷோரூம்) விற்பனையாகிறது. இந்த விலையை பொருத்தவரையில், அதன் போட்டியாளர்களான சுஸூகி கிக்சர் மற்றும் யாமாஹா ஃபேஸர் எஃப்ஐ போன்ற மாடல்களை விட ஏறத்தாழ 4,500 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரை குறைவாக உள்ளது கவனிக்கத்தக்கது. அதே போல் வசதிகளும் ஏராளமாக உள்ளது சிறப்பம்சம். நாம் முழுமையாக மைலேஜை சோதிக்கவில்லையெனினும் அனைத்து சாலைகளிலும் கலவையாக 50கிமீ எதிர்பார்க்கலாம்.

கணிப்பு:

bajaj-pulsar-as150-review-india-road-test-full

புதிய தலைமுறைகேற்ற தோற்றம், கூடுதல் அம்சங்கள் மற்றும் பவர்ஃபுல் என்ஜின் ஆகியவற்றை கொண்டிருந்தாலும் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் என்று சொல்லுமளவிற்கு இல்லை என்பதே உண்மை. அதே சமயம் ஹேன்ட்சமான தோற்றம் மற்றும் தினசரி அல்லது நீண்ட தூர பயணங்களை விரும்புபவர்களுக்கு நல்ல சாய்ஸ். என்ஜின் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். பிரேக்குகள் இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

மிகச் சரியான குறைவான விலை, விலையை விட அதிக வசதிகள், சிறந்த செயல்திறன், செக்மன்டில் சிறந்த மைலேஜ் எல்லாவற்றையும் விட மிகக் குறைவான பராமரிப்பு போன்றவற்றில் பஜாஜ் எஎஸ்150 முன்னிலை பெறுகிறது.